மனித உடலின் இயக்கம்

 ஆங்கிலத்தில் சிம்ப்டம் (Symptom) என்று குறிப்பிடப்படும் நோயின் அறிகுறிகளைத்தான், இன்றைய பெரும்பான்மையான மருத்துவர்கள் நோய் என்று எண்ணுகிறார்கள்.

 


நோயும் மருத்துவமும் (உடல் பற்றிய அடிப்படை புரிதலை ஏற்படுத்தும் தொடர்)

1. மனித உடலின் இயக்கம் 

“மனித உடல்”என்பது தலைமுடி முதலாக கால் பாதங்கள் வரையில், மொத்த வெளி மற்றும் உள் உறுப்புகளையும் உள்ளடக்கிய ஒரு முழுமையைக் குறிக்கிறது.   

மனித உடலில், கழுத்துக்கு மேலே உள்ள உறுப்புகளுக்குத் தனி இயக்கம், கழுத்துக்குக் கீழே உள்ள உறுப்புகளுக்குத் தனி இயக்கம், உடலின் உள்ளே உள்ள உறுப்புகளுக்குத் தனி இயக்கம், என்றெல்லாம் கிடையாது. தலைமுடி முதல் கால் பாதங்கள் வரையில் முழுமையான ஒற்றை இயக்கமாகத்தான் மனித உடல் இயங்கிக் கொண்டிருக்கிறது.   

முழுமையான ஒற்றை இயக்கமாக இயங்கிக் கொண்டிருக்கும் உடலில், ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதும், ஆராய்வதும், சிகிச்சை செய்வதும், தவறான வழிமுறையாகும். இவ்வாறு பிரித்துப் பார்த்து சிகிச்சை வழங்குவதால்தான் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலோனோருக்கு நோய் முழுமையாகக் குணமாவதில்லை. உடல் என்பது தலைமுடி முதல் கால் பாதங்கள் வரையில் முழுமையான ஒற்றை இயக்கமாக இயங்கிக் கொண்டிருப்பது புரிந்தால்தான், ஒரு உடலில் உண்டாகியிருக்கும் தொந்தரவின் உண்மையான மூல காரணத்தைக் கண்டறிய முடியும்.   

ஆங்கிலத்தில் சிம்ப்டம் (Symptom) என்று குறிப்பிடப்படும் நோயின் அறிகுறிகளைத்தான், இன்றைய பெரும்பான்மையான மருத்துவர்கள் நோய் என்று எண்ணுகிறார்கள். தோலிலும், உடலின் வெளிப்புறத்திலும், முகத்திலும் உண்டாகும் தொந்தரவுகளும், வலி வேதனைகளும்; உடலின் முக்கியமான பகுதிகளில் உண்டாகியிருக்கும் பலவீனத்தையும், நோய்க் கூறுகளையும், சேர்ந்திருக்கும் கழிவுகளையும் அடையாளம் காட்டக் கூடிய அறிகுறிகள் மட்டுமே; அவை நோய்கள் அல்ல.   

உடலில் எந்த ஒரு பாகத்தில் அல்லது உறுப்பில் தொந்தரவு உண்டானாலும், அது பெரும்பாலும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்புடையதாகத் தான் இருக்கும். பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளையும் கண்டறிவதுதான், உண்மையான முழுமையான நோயறிதல் முறையாக இருக்கும். 

உடல் என்பது முழுமையான ஒற்றை இயக்கம் என்பதைக் கருத்தில் கொண்டு நோய் கண்டவரை ஆராய வேண்டும். உடலின் இயக்கத்தில் உண்டாகியிருக்கும் குறை நிறைகளையும், உடல் மற்றும் மனதில் உண்டாகியிருக்கும் மாற்றங்களையும், தற்போது உடல் வெளிக்காட்டி இருக்கும் அறிகுறிகளையும், ஒப்பு நோக்கி; உண்மையான பாதிப்பையும், அது உண்டாகியிருக்கும் உடலின் பகுதியையும் கண்டறிய வேண்டும்.

நன்றி - ஹீலர் ராஜா முகமது காசிம்


Comments