பெரும்பாலான மக்கள் நோயை விடவும் நோயின் பெயரைக் கண்டே அச்சப்படுகிறார்கள். பெயர்களைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை, உடலின் தொந்தரவுகளுக்குப் பெயர் சூட்ட வேண்டிய அவசியமும் இல்லை. உடலில் உண்டாகியிருக்கும் உண்மையான பாதிப்பைப் புரிந்துகொண்டால் அச்சம் உருவாகாது.
நோயும் மருத்துவமும் (உடல் பற்றிய அடிப்படை புரிதலை ஏற்படுத்தும் தொடர்)
3. நோய்களின் வகைகள்
உடலை அதன் இயல்புடன் முழுமையாக இயங்கவிடாமல், உடலின் இயக்கத்தில் தடை உண்டாவதை நோய் என்று அழைக்கிறோம். நோய்கள் பல்லாயிரப் பெயர்களால் அழைக்கப்பட்டாலும் உண்மையான நோய்கள் என்பவை வெகுசிலதான். அனைத்து வகையான நோய்களுக்கும் மூல காரணமாக இருப்பவை, தவறான உணவுமுறை, தவறான வாழ்க்கை முறை, மற்றும் தவறான பழக்க வழக்கங்களினால் உடலில் சேரும் கழிவுகள், அவ்வளவு தான்.
தவறான உணவு முறையும், வாழ்க்கை முறையும், உடலில் சேரும் கழிவுகளும் மட்டுமே மனித உடலில் நோய்கள் உருவாகக் காரணமாகிவிடுமா? என்றால்; அவை எவ்வாறு நோய்களாக உருவாகின்றன என்பதைப் பார்ப்போம்.
தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளினால் அஜீரணம் உருவாகிறது. அஜீரணம் உருவானால் உடலில் ஆற்றல் குறைபாடு மற்றும் மலச்சிக்கல் உருவாகும். உடலில் ஆற்றல் குறைபாடு உருவானால் உடல் உறுப்புகளால் முழுமையாக இயங்கமுடியாது. உடல் உறுப்புகளில் இயக்கக் குறைபாடு உருவானால் சம்பந்தப்பட்ட உறுப்பு பாதிப்படையும்.
அஜீரணத்தின் காரணமாக உணவுக் கழிவுகள் முழுமையாக வெளியேற முடியாமல் குடலிலேயே தேங்கத் தொடங்கும். குடலில் தேங்கும் உணவுக் கழிவுகள், நாளடைவில் நச்சுத்தன்மை கொண்டவையாக மாறி, பலவீனங்களையும், உடல் உபாதைகளையும் உருவாக்கும். உடலில் கழிவுகளின் அளவு அதிகரித்தால், சில மாதங்களில் அவை இரத்தத்தில் கலந்துவிடும்.
இரத்தத்தில் கலந்துவிட்ட கழிவுகள், இரத்த ஓட்டத்தின் மூலமாக உடலின் உறுப்புகளைச் சென்றடையும்; அவை கலந்துவிட்ட உறுப்புகளைப் பலவீனப்படுத்தி பழுதாக்கிவிடும். உடலின் உறுப்புகளிலும் இயக்கத்திலும் பலவீனம் உண்டாகும் போது வலிகள், வேதனைகள் மற்றும் நோய்கள் உருவாகும்.
இவ்வாறுதான் உடலில் நோய்கள் உருவாகின்றன. அஜீரணமும், மலச்சிக்கலும், உடலில் சேரும் கழிவுகளும் தான் உண்மையான நோய்க் காரணிகள். மேலே நான் குறிப்பிட்ட நோய் வகைகளையும் காரணிகளையும் வாசிக்கும் போது உங்களுக்கு எந்த அச்சமும் பதற்றமும் உண்டாகி இருக்க வாய்ப்பில்லை.
ஆனால் மருத்துவர்கள் நமக்குப் புரியாத லத்தீன் மொழியில் தொந்தரவுக்கு ஒரு பெயர் சூட்டியதும் “எனக்கு அந்த நோய் உருவாகிவிட்டது, இந்த நோய் உருவாகிவிட்டது” என்ற அச்சம் உருவாகிவிடுகிறது. பெரும்பாலான மக்கள் நோயை விடவும் நோயின் பெயரைக் கண்டே அச்சப்படுகிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த, பல்வேறு மொழிகளைப் பேசும் ஆங்கில மருத்துவர்கள் அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கில மருத்துவர்கள் உடல் உபாதைகளை லத்தீன் மொழியில் குறிப்பிடுகிறார்கள்.
அவர்கள் கூறும் லத்தீன் மொழிப் பெயர்களைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை, உடலின் தொந்தரவுகளுக்குப் பெயர் சூட்ட வேண்டிய அவசியமும் இல்லை. உடலில் உண்டாகியிருக்கும் உண்மையான பாதிப்பைப் புரிந்துகொண்டால் அச்சம் உருவாகாது. உடலில் உண்டாகும் அத்தனை தொந்தரவுகளும் குணப்படுத்தக் கூடியவைதான். உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை வெளியேற்றி, உடலின் ஆற்றலை அதிகரித்து, இயக்கத்தைச் சீர் செய்தால் அனைத்து வகையான நோய்களும் எளிதாகக் குணமாகிவிடும்.
தொடரும்...
நன்றி - ஹீலர் ராஜா முகமது காசிம்



Comments
Post a Comment